அகிலேஷ் ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம்: அமித் ஷா காரசாரம்

மதுரா: ”உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் மீண்டும் தலை துாக்கும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: உ.பி.,யின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து விமர்சிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தகுதி இல்லை. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் உ.பி.,யில் குண்டர்களின் ராஜ்ஜியம் மீண்டும் தலை துாக்கும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மாநிலம் வளர்ச்சி பாதையில் நடைபோடும்.

எங்கள் ஆட்சி வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. நாங்கள் ஊழல் செய்ததாக எங்கள் அரசியல் எதிரி கூட குற்றஞ்சாட்ட முடியாது. முன்னர் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் குறிப்பிட்ட ஜாதியினருக்காக மட்டுமே பணியாற்றினர். ஒட்டு மொத்த சமூகத்திற்கான கட்சியாக பா.ஜ., உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.