குடிநீரில் கழிவுநீர் கலந்த வழக்கு: கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

புதுக்கோட்டை இடையூரில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் ஐகோர்ட்டு மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, மனுதாக்கல் செய்யப்பட்டு உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இரட்டைக்குவளை முறை, கோவிலில் அனுமதிக்காதது மற்றும் குடிநீரில் கழிவுநீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், வழக்கை ஜனவரி 5-ந் தேதி ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ள