‘இந்தியா’ கூட்டணி – பல கட்சிகள், கணக்குகளை தாண்டி முத்திரை பதிக்குமா?
இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று துவங்குகிறது. கூட்டணியில் பல தலைவர்களுக்கும் பல கணக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க. தவிர்த்து, அந்தக் கூட்டணி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன?
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மாலையில் துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் 26 (இன்னும் சில கட்சிகள் சேரலாம்) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 62 தலைவர்கள் பங்கேற்பார்கள்.
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் ஜூலை மாத மத்தியில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிஹாரின் முதலமைச்சர் நிதீஷ் குமார், அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். வியாழக்கிழமையன்று மாலையில் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் இந்தத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
ஏற்கனவே இருந்த கட்சிகளோடு, புதிதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி (பிடபிள்யுபி) என்ற கட்சியும் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள், இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சில தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் இந்தக் கூட்டணிக்கான இலச்சினையை உருவாக்குவது, ஒருங்கிணைப்பாளர், அமைப்பாளர்களை நியமிப்பது, முறையான கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி 9 இலச்சினைகள் உருவாக்கப்பட்டு, அதில் 3 இலச்சினைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மூன்றில் எந்த இலச்சினை அதிகாரபூர்வமானதாக இருக்கும் என்பது மும்பை கூட்டத்தில் முடிவுசெய்யப்படும்.
இந்தக் கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணியாக அமைய, வேறு சில சவால்களையும் இந்தக் கூட்டணி தாண்டியாக வேண்டும் என்கிறார் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியின் தலைவர்களில் ஒருவர். “கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மாநிலக் கட்சிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. சில கட்சிகளுக்கு இரண்டு மாநிலங்களில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. மாநிலக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், ஒருவரால் இன்னொருவருக்கு பலன் கிடைக்காது. அதேபோல பாதிப்பும் இருக்காது. ஆனால், காங்கிரசிற்கு மட்டும் பலனும் இருக்கும் பாதிப்பும் இருக்கும். காரணம், பல கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இடங்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொள்ளாது.
