இந்தியா தலைமை தாங்குவதால் சீனா சீர்குலைக்க முயற்சியா? ஜின்பிங் வராதது ஏன்?

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

அதிபருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங் தலைமையிலான குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்திருந்தது.

கடந்த மாத இறுதியில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னைகள் குறித்தும் பேசியிருந்தனர்.

ஆனால் இந்த சந்திப்பிற்கு பிறகு, சீனா தனது புதிய தேச வரைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் அருணாசலப் பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானவை எனப் பொருள்படும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவின் இந்த செயலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னை மீண்டும் பூதாகரமாகி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தால், இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர் இந்தியா வரவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி20 மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காததை மையாக வைத்து, பவ்வேறு கருத்துகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
ஜி 20 மாநாட்டில் ஷி ஜின்பிங் பங்கேற்காததற்கு சீனா கூறும் காரணங்கள் குறித்தும், இதுதொடர்பாக பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்தும் இங்கு காண்போம்.