இஸ்ரேல் ராணுவம், மொசாத் இரண்டும் இவருக்கு குறி வைப்பது ஏன்? எங்கே போனார்?
இஸ்ரேல் ராணுவம் பல ஆயிரம் துருப்புகள், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஒட்டுக்கேட்கும் சாதனங்கள், மற்றும் மொசாத் உளவாளிகள் ஆகியோர் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கையில் அவர் காணாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
வெள்ளை முடி மற்றும் கருப்பு புருவங்களைக் கொண்ட சின்வார், காஸாவில் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகவும், இஸ்ரேலால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.
இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக சின்வாரையும் இஸ்ரேல் சேர்த்திருக்கிறது.
“யாஹ்யா சின்வார் தான் தளபதி… அவருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி அக்டோபரில் அறிவித்தார்
“இந்த அருவருப்பான தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் தான் முடிவு செய்தார்,” என்று ஐ.டி.எஃப் தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி கூறினார். “ஆகையால் அவர் மீதும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் மீதும் குறிவைத்திருக்கிறோ,” என்றார்.
அதில் ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் என்பவரும் அடங்குவார்.
அக்டோபர் 7-ஆம் தேதியின் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதற்குப் பின்னால் டெய்ஃப் மூளையாக இருந்தார், ஏனெனில் அது ஒரு இராணுவ நடவடிக்கை. ஆனால், சின்வார் ‘திட்டக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்,’ என்று ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளர் ஹக் லோவாட் கூறுகிறார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கும் சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.
அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். அவரது பெற்றோர் இன்று இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலோன் நகரைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அகதிகளானார்கள். 1948-இல் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.
