இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் பைடன் – என்ன செய்யப் போகிறார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (புதன்கிழமை, அக்டோபர் 18) இஸ்ரேலுக்குப் பயணம் செய்யவுள்ளதாக, தற்போது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையேயான ஏழு மணி நேர சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பைடன் இஸ்ரேலுக்கு நாட்டிற்குப் பயணம் செய்யும் போது ‘இஸ்ரேலின் போர் நோக்கங்கள் மற்றும் மூலோபாயம் பற்றிய விரிவான தகவலைப்’ பெறுவார், என பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், ‘பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்கும் விதத்தில் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்பதையும், இஸ்ரேல் காஸாவில் உள்ள பாலஸ்தீனியப் பொதுமக்களுக்கு உதவிகளை அனுப்ப என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும் கேட்டறிவார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பைடனின் பயணம் அமையவிருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது காசாவின் ராக்கெட் தாக்குதலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது.