ஜாபர் சாதிக் கைதை அரசியலாக்குகிறதா போதைப் பொருள் தடுப்பு பிரிவு? – முன்னாள் அதிகாரிகள் சொல்வது என்ன?

சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

அவர் கைதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவற்றில், முக்கியமாக, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார், அவர் அந்தப் பணத்தில்தான் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி பொது வெளியில் பகிர்ந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், இதற்கு முன் இத்தகைய வழக்குகள் இப்படியாகக் கையாளப்படவில்லை என்றும் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் செயல் சட்டத்திற்கு உட்பட்டதா? இதில், அரசியல் நோக்கம் உள்ளது எனும் வாதத்தை முன்னாள் காவல்துறை அதிகாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனப் பொருட்களில் ஒன்றான சூடோபெட்ரைன் (pseudoephedrine), வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் செயல்பட்டு வந்த குடோனில் அதிரடியாக நுழைந்த டெல்லி போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டார் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து., திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின், டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டினர்.