மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடகா பிடிவாதம்: தமிழ்நாடு அரசு எதிர்ப்பது ஏன்? – முழு பின்னணி
மேகேதாட்டு அணை விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு. இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்த பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், தமிழக எல்லையில் இருந்து நான்கு கி.மீ. தூரத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதால், இரு மாநிலங்களிலும் விவசாயிகள், அரசியல்வாதிகளிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலைஏற்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை பிரச்னையின் பின்னணி என்ன?
மேகேதாட்டு என்பதற்கு கன்னடத்தில் ‘ஆடு தாண்டக்கூடிய’ என்று பொருள். கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது மேகேதாட்டு.
இங்கு ஓர் அணையைக் கட்டி, பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதோடு, மின்சார உற்பத்தியிலும் ஈடுபட விரும்புகிறது கர்நாடகா.
மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்முதலாக 1948இல் முன்வைக்கப்பட்டது. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
ஆனால், காவிரி நீரை எப்படி பிரித்துக்கொள்வது என்பதில் கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் 70களில் மோதல் மூண்ட நிலையில் மேகேதாட்டு விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு தேசிய நீர் மின் கழகம், காவிரியின் குறுக்கே நான்கு மின் திட்டங்களை உருவாக்க ஒரு யோசனையை முன்வைத்தது. அதன்படி மேகேதாட்டுவில் 400 மெகாவாட்டிற்கும் சிவசமுத்திரத்தில் 345 மெகாவாட்டிற்கும் ராசிமணலில் 360 மெகாவாட்டிற்கும் ஒகேனக்கலில் 120 மெகாவாட்டிற்கும் நீர்மின் நிலையங்களை உருவாக்கலாம் எனப் பேசப்பட்டது.
ஆனால், இந்த மின் திட்டங்களை உருவாக்குவதிலும் இரு மாநிலங்களுக்கு இடையில் எந்தக் கருத்து ஒற்றுமையும் ஏற்படவில்லை. ஆகவே, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் மேகேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடகா கையில் எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி மேகேதாட்டுவில் 9,000 கோடி ரூபாய் செலவில் ஓர் அணை கட்டப்படும். இதில் 67.16 டிஎம்சி நீர் தேக்கப்படும். இந்த அணை கட்டப்படுவதால் 6,996 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும்.
இந்தத் திட்டத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு பெங்களூருவுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் போவதாக கர்நாடக அரசு கூறுகிறது.
இந்த அணையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒரு நீர் மின் நிலையமும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணையைக் கட்டினால், நடுவர் மன்றம் அளித்த ஆணையில் உள்ளதுபோல ஒவ்வொரு மாதமும் அணையைத் திறந்து நீரைச் சரியாக வழங்க முடியும் எனவும் கர்நாடகா கூறுகிறது.
இந்தத் திட்டத்திற்கு Mekedatu Balancing Reservoir cum Drinking Water Project என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என கர்நாடக மாநிலத்தின் இரு அவைகளும் கடந்த ஆண்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ‘நம்ம நீரு, நம்ம ஹக்கு’ (நமது நீர், நமது உரிமை) என்ற கோஷத்தை முன்வைத்து டி.கே.சிவக்குமார் தலைமையில் பெங்களூருவிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதிவரை 10 நாட்கள், பல ஊர்கள் வழியாகச் சென்று 19ஆம் தேதியன்று மேகேதாட்டுவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்குப் பிறகு 2022 -23ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் பாஜக அரசு ரூ.1000 கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில்தான் புதிய அரசு அமைந்த பிறகு, டி.கே. சிவகுமார் இந்தத் திட்டத்தில் வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
