அண்ணாமலையை தனித்து குறி வைக்கிறதா அதிமுக? பின்வாங்கும் பாஜக – பின்னணி என்ன?
ஜெயலலிதா தொடர்பாக பா.ஜ,க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்த விமர்சனம் அதிமுக – பா.ஜ.க இடையிலான பனிப்போரை பகிரங்க மோதலாக மாற்றியிருக்கிறது.
முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக இருக்கிறார் என்று அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஆனால், ஒரு கட்சித் தலைவராக அல்லாமல், அண்ணாமலையை அ.தி.மு.க தனித்துக் குறிவைத்திருப்பதாக பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஆகவே, இது அண்ணாமலை vs அதிமுகவா அல்லது பா.ஜ.க. vs அதிமுகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தன. முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது,” என்று கூறியிருந்தார்.
“முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்,” என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே அண்ணாமலை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று அ.தி.மு.க தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்துவிட்டனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணாமலையைக் கண்டித்து அதிமுக தீர்மானம்
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தாகக் கூறப்படுகிறது.
முடிவில், அண்ணாமலையைக் கண்டித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.
“பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசி உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோதி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளார்கள். அண்ணாமலை திட்டமிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார்.
