மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய என்விடியா – பாத்திரம் கழுவியவரின் நிறுவனம் வென்றது எப்படி?
என்விடியா (Nvidia) நிறுவனம் உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக உருமாறியுள்ளது. செவ்வாயன்று (ஜூன் 18) அதன் பங்கு விலை எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாகி உள்ளது.
பங்குச் சந்தையில், செவ்வாயன்று என்விடியாவின் பங்குகள் சுமார் 3.5% உயர்ந்தன, அதன் பங்கு வர்த்தக நாள் சுமார் $136 என்ற மதிப்பில் முடிவடைந்தது, இது மைக்ரோசாப்ட் மதிப்பை விட அதிகம். கடந்த மாத தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நிறுவனமான என்விடியா செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிப்’-களை உற்பத்தி செய்து வருகிறது, அதன் தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் அதன் விற்பனை மற்றும் லாபம் உயர்ந்து வருகிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. அந்த தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கும் ’சிப்’புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வது என்விடியா நிறுவனம் தான். எனவே என்விடியாவின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
பல முதலீட்டாளர்கள் என்விடியா நிறுவன வருவாய் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறார்கள், இது அதன் பங்கு விலை உயர காரணமாக இருந்தது, இருப்பினும் சிலர் அதன் உயர் மதிப்பீட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
இத்தனை சவால்களை உள்ளடக்கிய என்விடியா நிறுவனத்தின் வரலாறு என்ன? உணவகங்கள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை செய்துக் கொண்டிருந்த ஹுவாங்கின் கனவில் உதித்த இந்நிறுவனத்தின் வரலாறு அவ்வளவு எளிதானது அல்ல.
