‘மோதி ஆட்சியை’ அசைத்துப் பார்க்குமா? எதிர்க்கட்சிகளின் ரகசிய வியூகம் என்ன?
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாதபோதும், புதன்கிழமை (ஜூலை 26) எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசும் அரசியல் ஆய்வாளர்கள், இது மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு என்கிறார்கள். அதேநேரம், இதுகுறித்து பேசும் எதிர்க்கட்சியினர், இது மோடி அரசின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் வீழ்த்துவதற்கான ஆயுதம் என்கிறார்கள்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என நான்கு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நான்கு நாட்களும் இரு அவைகளும் முடங்கின.
இந்நிலையில், செவ்வாயகிழமையன்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்ட வர எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகருக்கு நம்பிக்கையில்லாத் தீர்மனம் அனுப்பப்பட்டது.
வழக்கமாக. காலை 10 மணிக்கு முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் சென்றால், அன்றைய தினமே அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதிப்பதற்கான தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார்.
