மோதியின் பிரான்ஸ் பயணம் – இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வரும் வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) செல்கிறார்.
அங்கு, பிரான்ஸ் நாட்டின் தேசிய நாளான ‘பாஸ்டில் டே’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இரண்டாவது இந்தியப் பிரதமர் மோதி ஆவார். கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இப்பயணத்தில், பாதுகாப்பு, மற்றும் மூலோபாய ஒப்பந்தங்கள், ரஷ்யா-யுக்ரேன் போர் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலைகுறித்து மோதியுடன் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோங், விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சின் வருடாந்திர நிகழ்ச்சியான பாஸ்டில் டேக்கு (Bastille Day) இந்தியத் தலைவர்களை மீண்டும் மீண்டும் அழைப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நான்கு தசாப்தங்களாக, ஐரோப்பாவில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரிட்டன் இருந்து வந்தது.
ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில், கருத்துப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நலன்களின் மட்டத்தில் பிரான்ஸ் நெருங்கி வந்ததால், ஐரோப்பாவில் இந்தியாவின் வலுவான நட்பு நாடாக உருவெடுத்துள்ளது.
இது மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. கடந்த 1998-ல் கையெழுத்திடப்பட்ட மூலோபாய கூட்டு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மிகவும் வலுப்படுத்தியது.
கடந்த 25 ஆண்டுகளில் இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்து வருகின்றன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு பதிலடியாக அனைத்து மேற்கத்திய நாடுகளும் இந்தியா மீது பல வகையான கட்டுப்பாடுகளை விதித்தன். ஆனால் பிரான்ஸ் இந்த தடை நாடுகளுடன் சேரவில்லை. இது மட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாடுகளை நீக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது.
இத்துடன் சில நாடுகள் இந்தியாவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. ஆனால் பிரான்ஸ் அந்தச் சந்தர்ப்பத்திலும் தடை நாடுகளுடன் நிற்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, கடந்த 25 ஆண்டுகளில், விமானம் முதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை பல்வேறு வகையான பாதுகாப்புப் பொருட்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் இரண்டாவது பெரிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இந்த விஷயத்தில் ரஷ்யா மட்டுமே பிரான்ஸை விட முன்னிலையில் உள்ளது.
