மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா – பென்டகன் கூறியது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இடையே இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுக் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

மோதியின் இந்தச் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோதி தன் எக்ஸ் இணையதளத்தில் ரஷ்யப் பயணம் குறித்து, ‘ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது. இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இந்திய – ரஷ்ய ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பென்டகன் இதுகுறித்து, இந்தியா யுக்ரேன் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் என நம்புவதாக கூறியுள்ளது.

மோதி இந்திய பிரதமராக மூன்றாவது முறைப் பதவியேற்றப் பிறகு ரஷ்யா செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்தும், இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‘ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுக் குறித்த எங்கள் நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.

‘எங்கள் கவலைக் குறித்து இந்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளோம். இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம், இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து இவர், ‘ஐக்கிய நாடுகளின் சாசனக் கொள்கைகளின் அடிப்படையில் யுக்ரேன் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமைதி மற்றும் இறையாண்மையை நிலைநாட்ட நாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்படி இந்தியாவிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.’ என கூறி இருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு.
ஆரம்பத்தில், மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி, இந்தியா ரஷ்யாவிடம் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், ‘இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான உறவு நிலவி வருவதால், ரஷ்யாவை இந்தக் கொடூரமானப் போரை நிறுத்த வலியுறுத்த இந்தியாவிற்கு திறன் இருக்கிறது’ எனக் கூறி இருந்தார்.

இவரைப் பொறுத்தவரையில், ‘இந்தியா நமது முக்கியமான உத்திசார் கூட்டு நாடு, இதனுடன் நாம் முழுமையான மற்றும் திறந்தப் பேச்சுவார்த்தைக் கொண்டிருக்கிறோம். இதில், இந்தியா – ரஷ்யா இடையேயான உறவும் அடங்கும், இதுகுறித்து நாம் முன்பே பேசி இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

“இதில் முக்கியம் என்னவெனில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் யுக்ரேன் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றன. அதிபர் புதின் தான் இந்தப் போரைத் துவக்கினார். இவரால் மட்டுமே இதை நிறுத்த முடியும்”

உண்மையில், ரஷ்யா – யுக்ரேன் இடையேயான போர் பிப்ரவரி 2022 இல் துவங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் இலக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மார்ச் 2023 இல் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.

கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாஸ்கோ சென்ற போது, ரஷ்ய அதிபர் புதின் அவரை வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நட்புப் பாராட்டினர்.