மோதிக்கும் பாஜகவுக்கும் பலன் கிடைக்கும் என கணித்த சீன ஊடகங்கள்
டெல்லியில் முடிவடைந்த ஜி-20 மாநாட்டில் கூட்டறிக்கை மீது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேபோல உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு இதன்மூலம் அதிகரித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் யுக்ரேன் போர் தொடர்பாக ஜி20 நாடுகள் பிளவுப்பட்டிருக்கும் சூழலில் ஒருமித்த கருத்து என்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கருதினார்கள்.ஜி20 மாநாட்டின் கூட்டுத் தீர்மானத்தை யுக்ரேனைத் தவிர ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
இருப்பினும் இந்த தீர்மானம் கடந்த ஆண்டின் தீர்மானத்தை போல ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எல்லா உலகத் தலைவர்களுடனும் மிகுந்த நட்பு பாவத்துடன் காணப்பட்டார்.
இறுதியாக அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் ‘சிரித்துப்பேசும்’ படமும் வெளிவந்தது.
இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ஜி-20 மாநாட்டின் வெற்றி குறித்து உலக ஊடகங்களும் தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளன.
“இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு ஜி-20 இல் காணப்பட்டாலும், பத்திரிகை சுதந்திரம் பற்றிய கவலைகளும் இருந்தன” என்று அமெரிக்க செய்தி முகமை என்பிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். அந்த நேரத்தில் முழு டெல்லியும் ஸ்தம்பித்தது.
சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் தனதுகட்டுரையில், ஜி-20 மாநாடு வளர்ந்து வரும் வேறுபாடுகளுக்கு மத்தியில் அடிப்படை ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளது என்று கூறியுள்ளது.
“டெல்லியில் நடந்துமுடிந்த ஜி-20 உச்சிமாநாடு இறுதியாக கூட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இதில் யுக்ரேன்போர் தொடர்பாக மிகவும் அடிப்படையான ஒற்றுமை மற்றும் நடுநிலை அணுகுமுறை காணப்படுகிறது,” என்று குளோபல் டைம்ஸ் எழுதியது.
“ஜி-20, உலகளாவிய நிர்வாகத்திற்கான ஒரு முக்கியமான பல்முனை மேடை என்று சீன ஆய்வாளர்கள் இப்போதும் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்தக்குழு, பெரும் சக்திகளுக்கு இடையிலான சிக்கலான மோதல்களால் செயலிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது,” என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிடுகிறது.
மாநாட்டில் பங்கேற்க வந்த சீனப் பிரதமர் லி சியாங்கின் அறிக்கையையும் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜி-20 உறுப்பினர்கள் ஒரு முன்மாதிரியான பாத்திரத்தை வகிக்க வேண்டும். குறிப்பிட்ட நிகழ்வுகளிலிருந்து தொடங்கி நிகழ்காலத்தில் நல்லது செய்ய முயற்சிக்க வேண்டும் என்று மாநாட்டின் போது லி சியாங் கூறினார்.
