மோதி அரசின் கொள்கையால் அரபு நாடுகளில் பணிபுரியும் 90 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுக்ரேனைத் தாக்கியபோது, மோதி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை பரவலாகப் பாராட்டப்பட்டது. இந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்தது.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கூட மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி, அது இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறின. இந்த விவகாரத்தில் அரசுடன் இருப்பதாக ராகுல் காந்தியும் கூறியிருந்தார்.

யுக்ரேன்-ரஷ்யா போரில், உலக தெற்கின் குரலாக தன்னைக் காட்டிக் கொள்ள இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டதுடன், புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றியும் பெற்றது.

ஆனால் இப்போது ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படும் போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீது பல கேள்விகள் எழுந்துள்ளன.

யுக்ரேன்-ரஷ்யா போரில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் இந்தியா கடைப்பிடிக்கும்
நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.