எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ – எம்.பிக்களின் பதில் என்ன?
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்துள்ளன. ஆனால், தங்களது ‘புறக்கணிப்பு’ சரிதான் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறியது ஏற்கப்படாத நிலையில், இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன.
மொத்தமாக 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் இந்தச் செயல்பாடு மரியாதைக் குறைவானது எனக் கூறப்பட்டுள்ளது.
“கடந்த ஒன்பதாண்டுகளாகவே எதிர்க் கட்சிகள் நாடாளுமன்ற நடைமுறைகள் மீது எவ்வித மரியாதையையும் காட்டுவதில்லை. முக்கியமான சட்டம் இயற்றும் நடவடிக்கைகளின்போது நாடாளுமன்ற கூட்டத்தில் கலகம் செய்வது, வெளிநடப்புச் செய்வது ஆகியவற்றின் மூலம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீது ஒரு அலட்சியத்தையே வெளிப்படுத்திவந்துள்ளனர். சமீபத்திய புறக்கணிப்பு அறிவிப்பும் அதுபோன்றதுதான்.
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைகள் நகைப்புக்குரியவை. குடியரசுத் தலைவர் பங்கேற்ற சிறப்பு ஜிஎஸ்டி கூட்டத்தை இவர்கள் புறக்கணித்தார்கள். பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட நிகழ்வை புறக்கணித்தார்கள். தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அதனை ஏற்க மறுத்து இந்த நாட்டின் பழங்குடி மக்களை அவமானப்படுத்தினார்கள்.
