எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’: பிரதமர் மோதிக்கு சவாலாக இருக்குமா?
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று (ஜுலை18) நிறைவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தேசிய அளவில் ‘மஹாகத்பந்தன்’என்று இதுநாள்வரை அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரை இனி, இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி ‘இந்தியா’ (INDIA) என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுத்துள்ள இந்த முடிவையும், அக்கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளதையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாகவே அரசியல் ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த இந்த செயல்பாடு ஓர் நல்ல தொடக்கமாக இருந்தாலும், பாஜகவை வீழ்த்த அவை இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறுகின்றனர் அவர்கள்.
தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தங்களுக்குள் நிலவும் சிக்கல்களுக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாவது எதிர்க்கட்சிகள் தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
