பா.ஜ.க. புதிய தலைவரைத் தேர்வு செய்ய இவ்வளவு காலம் எடுப்பது ஏன்? என்ன நடக்கிறது?
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக வரப்போவது யார்? கட்சியின் தலைவராக இருந்த ஜகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசியல் வட்டாரங்களில் இந்தக் கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த விஷயம் தொடர்பாகத் தீவிர விவாதம் நடைபெற்றதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோஸ்போலே, இணை பொதுச்செயலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பதவிக்கு பல தலைவர்களின் பெயர்கள் பல மாதங்களாக அடிபட்டு வருகின்றன. ஆயினும் பல மணிநேரம் நடந்த இந்த முக்கியக் கூட்டத்திலும் யாருடைய பெயரும் அங்கீகரிக்கப்பட்டதாக செய்திகள் வரவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி.
ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படுமா? ஒபிசி பிரிவில் இருந்து ஏதேனும் புதுமுகம் இந்தப் பதவியில் அமர்வாரா?
