பாமக, நாம் தமிழர் ஆகிய இரண்டில் எந்தக் கட்சிக்கு அதிமுக வாக்குகள் கிடைக்கும்?

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த போது, இடைத்தேர்தல் போட்டியில் அதிமுக இல்லாதது எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்” என்று பேசினார்.

அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இப்படி பாமகவும், நாம் தமிழர் கட்சியும் தங்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுகவினரிடம் கோரிக்கை வைப்பது ஏன்? இது குறித்து அதிமுக கூறுவது என்ன?