பிரிகோஜின்: புதின் நண்பராக உச்சம் தொட்டவர் எதிரியான இரண்டே மாதங்களில் மரணம் – எப்படி?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது.

அரசு பாதுகாப்பு ஏஜென்ஸிகள், தலைமறைவு உலகத்தின் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த காலப்பகுதியில் உருவான, ஒருவரை ஒருவர் சார்ந்த உறவு இது. அதன் முடிவு மோசமாகவே இருக்கும் என்பது கண்கூடு.

வாக்னர் குழுமம் சில தசாப்தங்களுக்குள் ரஷ்யாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாக மாறியது. புதின் அரசு தொடர்வது, யுக்ரேன் போரில் பிரிகோஜினின் வெற்றியை சார்ந்ததாக ஆகிவிட்டதாக மேலும் சிலர் கருதினர்.

இப்போது அரசியல் செல்வாக்கிற்கான எல்லா போட்டிகளையும் முடிவுக்கு கொண்டுவர கிரெம்ளின் விரும்புகிறது என்றே தோன்றுகிறது.

1990களின் முற்பகுதியில் எவ்கேனி பிரிகோஜின் முதல் முறையாக விளாதிமிர் புதினை சந்தித்தார். அவர்களின் முதல் சந்திப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் பிரிகோஜின் சிறையில் இருந்து அப்போதுதான் விடுவிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மறுபுறம் சோவியத் பாதுகாப்பு சேவையான கேஜிபிக்காக கிழக்கு ஜெர்மனியில் ஒரு பணியை முடித்துவிட்டு புதின் திரும்பி வந்திருந்தார். அரசியலில் நுழைய அவர் வழியை தேடிக்கொண்டிருந்தார்.