இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி மீனவர் பிரச்னையை எழுப்ப திட்டம்
நம் அண்டை நாடான இலங்கைக்கு, இம்மாத இறுதியில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந் நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க உள்ளார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி
வருகிறது.
இந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட, இலங்கை அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது.இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 30ம் தேதி கொழும்பில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 31ம் தேதி யாழ்ப்பாணம் செல்கிறார்.
அப்போது, அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். தமிழர்களின் நலன், அதிகரித்து வரும் பயங்கரவாதம், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்திய மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை குறித்து மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி, இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைய உள்ளது.
