பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?

கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது.

ஐரோப்பாவிலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடாக ஹங்கேரி கருதப்படுகிறது. மேலும் விக்டர் ஆர்பானைச் சர்வாதிகாரி என பலரும் வர்ணிக்கின்றனர்.

இந்தச் சூழலில், ஜூலை 8, 9 தேதிகளில் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோதி மேற்கொள்ளும் பயணத்தை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன?
இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த நாடும் வெளிப்படையாகக் கருத்து கூறவில்லை என்றபோதும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவைப் போருக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியில் இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.

யுக்ரேன் மீது படையெடுத்து, இன்று ஐரோப்பாவில் பதட்டமான சூழலை உருவாக்கிய நபராகக் கருதப்படும் புதினுடன் மோதி நிற்கும் புகைப்படங்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பது மட்டும் நிச்சயம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் பயணமா?
22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவதற்கான புதினின் அழைப்பை ஏற்று மோதி ரஷ்யாவுக்குச் செல்கிறார் என்கிறது அதிகாரபூர்வ அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக இரு நாட்டு உறவு ரீதியான சந்திப்புகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் குறித்து புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அரசு, இரு நாட்டுத் தலைவர்களும், ‘பாரம்பரியமாக நட்பு பாராட்டும் ரஷ்ய-இந்திய நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள்’ பற்றி விவாதிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தியா இந்தச் சந்திப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை வெளியிடவில்லை எனினும் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சந்திப்பு மேற்கத்திய நாடுகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இரு நாடுகளின் நட்பைத் தாண்டி இந்தச் சந்திப்பில் ஏதேனும் இருக்கிறதா?

தெற்காசிய அரசியல் ஆய்வுகளில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் க்றிஸ்டோஃபர் ஜாஃபர்லாட் மோதியின் மாஸ்கோ பயணம் புவிசார் அரசியல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

“ஆயுதங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு நாடுகளுடன் நட்பைப் பேணுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதால் ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா தொடர விரும்புகிறது,” என்று குறிப்பிடுகிறார் ஜாஃபர்லாட்.