ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் – என்ன நடந்தது?
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, “அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை” என்றும் கூறினார்.
“மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்” என்றார் ராகுல்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி பேசி முடித்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டது ஏன்?
நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். பதவி நீக்கம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
“கடந்த ஆண்டு 130 நாட்கள் இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு சென்றேன். தனியாக இல்லை, பலருடன் சென்றேன். யாத்திரையின் போது பலரும் என்னிடம் ராகுல் ஏன் நடக்கிறீர்கள், உங்கள் நோக்கம் என்ன என்று கேட்டனர். ஏன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் செல்கிறீர்கள் என்று கேட்டனர்.
இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பினேன். தினமும் 10 கிலோமீட்டர் ஓடுவேன். அதனால் 25 கிலோமீட்டர் நடப்பதில் என்ன பெரிய விஷயம் என்று நினைத்தேன். பயணத்தின் போது விவசாயியின் கண்களில் இருந்த வலி, என் கண்களுக்குப் புலப்பட்டது.” என்று ராகுல் காந்தி பேசினார்.
மேலும் தொடர்ந்த அவர், “இந்தியா ஒரு குரல். இந்தியா நமது மக்களின் குரல். இதயத்தின் குரல். அந்தக்குரலை நீங்கள் மணிப்பூரில் கொலை செய்துள்ளீர்கள். இந்தியத்தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள்.
இந்திய தாயை, மணிப்பூர் மக்களை கொன்று நீங்கள் இந்தியாவை கொன்றுள்ளீர்கள். நீங்கள் தேச துரோகி. நீங்கள் தேச பக்தர் அல்ல. நாட்டை நேசிப்பவர் அல்ல. நீங்கள் தேச துரோகி. நீங்கள் நாட்டை மணிப்பூரில் கொன்றுள்ளீர்கள்.
சபாநாயகர் அவர்களே, இவர்கள் மணிப்பூரில் இந்தியாவை கொன்றுள்ளனர். இவர்களின் ஆட்சியில் மணிப்பூரை மட்டுமல்ல, இந்தியாவை கொன்றுள்ளனர். அரசியலில் மணிப்பூரை அல்ல, இந்தியாவை மணிப்பூரில் கொன்றுள்ளனர். இந்தியாவை கொன்றுள்ளனர். இந்தியாவை மர்டர் செய்துள்ளனர்.” என்று கூறினார்.
“பிரதமர் மோதியைப் பொறுத்தவரை மணிப்பூர் என்பது இந்தியாவின் அங்கம் இல்லை” என்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
“நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால் இன்றைய உண்மை என்னவென்றால் மணிப்பூர் அழிந்துவிட்டது. மணிப்பூரை நீங்கள் இரண்டாக பிளவுபடுத்திவிட்டீர்கள். மணிப்பூரை பிரித்துவிட்டீர்கள். உடைத்துவிட்டீர்கள்.
சபாநாயகர் அவர்களே, என்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக பணியமர்த்தியதற்கு முதலில் நன்றிகூற விரும்புகிறேன். நான் கடந்த முறை பேசியபோது, நான் அதானி பற்றி வலுவாகப் பேசியதால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தியிருக்கலாம். உங்கள் உயர் தலைவரின் மனம் வருந்தியிருக்கக் கூடும்” என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி உரையாற்றிய போது மோதியும், அமித் ஷாவும் அவையில் இல்லை. எனினும் பாஜக உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி பேசி முடித்ததும் அவையில் இருந்து வெளியேறினார்.
