ரணில் விக்ரமசிங்கவை கண்டு இந்தியா பயப்படுகிறதா? சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொள்வதால் என்ன பிரச்னை?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் தேதி இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஸவே காரணம் எனச் சுட்டிக்காட்டி, நாட்டு மக்கள் பாரிய போராட்டங்களின் ஊடாக அவரை பதவியிலிருந்து விரட்டியடித்தனர்.
அதைத் தொடர்ந்து, இலங்கையின் 8வது ஜனாதிபதி என்ற அந்தஸ்தை நாடாளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க தனதாக்கிக் கொண்டார்.
நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த ஓராண்டு காலத்திற்குள் நாட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து வித முயற்சிகளையும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணமானது, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
பதவியேற்றதன் பின்னர், பிரித்தானியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஏன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி பலரது மனங்களில் எழுந்திருந்தது.
குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றதன் பின்னர், அயல் நாடு என்ற விதத்தில் முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு செல்வதை வழக்காகக் கொண்டிருந்தனர்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் விவகாரத்தில் அது அவ்வாறு நடந்தேறவில்லை.
இதற்கான காரணம் என்னவென்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளரும்,சிரேஷ்ட பத்திரிகையாளருமான அ.நிக்ஸனிடம் பிபிசி தமிழ், வினவியது.
