வள்ளலார் பிறந்த இல்லத்தை புதுப்பிக்க கோரிக்கை: பழமை மாறாமல் கட்ட நடவடிக்கை தேவை
புவனகிரி-புவனகிரி அடுத்த மருதுாரில் அருட்பிரகாச வள்ளலார் அவதார இல்லத்தை விரைந்து புதுப்பிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாடிய பயிரை கண்ட போது வாடினேன் என்றும் உயிர்ப்பலி கூடாதென்று உலக மக்களுக்கு உன்னத நெறியை எடுத்துச்சொன்னவர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள் . பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று கட்டளை வாக்கியத்தில் மானுடர்களுக்கு நல்லுனர்வை எடுத்துரைத்தவர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா மருதுாரில் பிறந்த வள்ளலார் ஆன்மிக நெறியில் வாழ்ந்த போது சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நேரத்தில் ஆறுமுக நாவலரின் கடுஞ்சொல்லினால், அருகில் உள்ள வடலுாரை உத்திஞானச்சிதம்பரம் என உருவாக்கி சேவை செய்தார். தருமசாலையை துவக்கி, பின்னாளில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத்தில் ஜோதியானார்.
இவரின் ஜீவாகாருண்யத்தின் உணர்வை ஏற்ற பக்தர்கள் பல்வேறு பகுதியில் உயிர் இரக்கத்துடன், பசி என வருவோர்க்கு புசியாற அமுது படைத்து வருகின்றனர். வடலுாருக்கு வரும் பக்தர்கள் வள்ளல் பெருமான் பிறந்த மருதுாருக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கோடை மற்றும் விசேச தினங்களில் 500 க்கும்மேற்பட்டவர்களும் மற்ற தினங்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தியானம் செய்து செல்கின்றனர்.
மருதுாரில் அவர் துவக்கி வைத்த அன்னதான கூடத்தில் காலை மற்றும் மதியம் என இரு வேளையில் குறைந்தது 200 பேர் உணவருந்தி வருகின்றனர். அவர் பிறந்த இல்லம் தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் தொல்லியல் துறையின் விதிகளுக்குட்பட்டுள்ளது.
கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இவற்றை இடித்து விட்டு தற்போதுள்ள அதே நிலையில் புதியதாக கட்ட வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் பொதுப்பணித்துறையினர் நேரில் ஆய்வு செய்து, கட்டடத்தின் பாதிப்பு தன்மை மற்றும் இடித்து விட்டு புதியதாக கட்டுவதற்கான தரச்சான்று கொடுத்துள்ளனர்.
ஆனால் அரசு இது வரை எந்த முடிவும் எடுக்க வில்லை என பக்தர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே வரலாற்றுச்சின்னமாக உள்ள வள்ளலார் அவதார இல்லத்தை காலம் கடத்தாமல்,இடித்து விட்டும் மீண்டும் பழமை மாறாமல் புதிதாக கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
