செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு ஏன்?அமலாக்கத்துறை தரப்பு வாதம் என்ன?
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கக்கூடும்?
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் ஆஜரானார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு அளித்ததை எதிர்த்து முதலில் துஷார் மேத்தா வாதிட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41 ஏ-வின் கீழ் நோட்டீஸ் வழங்காமல் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டதை சுட்டிக்காட்டிய துஷார் மேத்தா, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதைத் தடைசெய்யும் சட்டத்தின் கீழ் வரும் நடைமுறைகளுக்கு 41 – ஏ பிரிவு பொருந்தாது என விஜய் மதன்லால் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
