செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு – இது சட்டப்படி சாத்தியமா?
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஏற்பு தெரிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அவரை அமைச்சரவையில் தொடர வைத்திருந்தது.
தற்போது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்வினை ஆற்றினார்.
இதுகுறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “செந்தில்
பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி, ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் தற்போது பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டதுதானா என்பது
குறித்து அரசமைப்பு சட்ட அறிஞர், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ஆளுநருக்கு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவு வந்துள்ளது.
