கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதா தமிழ்நாடு? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உண்மையா?
இந்த ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது எந்த அளவுக்கு உண்மை? ஒரு மாநிலம் எந்த அளவுக்குக் கடன் வாங்கலாம்?
தமிழ்நாட்டின் 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 19, திங்கள், தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை ஒட்டி தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய கடன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறை 49,278.73 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 % இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதி ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாயை கடனாக வாங்கும் என்றும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை திரும்பச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த நிதியாண்டின் முடிவில் அதாவது 2025 மார்ச் 31-ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும்.
“ஒரு மாநிலம் கடன் வாங்குவது பிரச்னையல்ல. அந்தக் கடன் எதற்காக செலவழிக்கப்படுகிறது என்பது முக்கியம். இந்த ஆண்டில் தமிழ்நாடு 1,55,584.48 கோடி ரூபாயை கடனாக வாங்கும் என்றும் 49,638.82 கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“அப்படியானால், ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை திரும்பச் செலுத்துகிறோம். இது மிகச் சிக்கலான விஷயம். முதலீட்டிற்காக கடன் வாங்கினால் பரவாயில்லை. ஆனால், செலவுகளுக்காக கடன் வாங்கினால் அதற்கு முடிவே இருக்காது,” என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ். நாராயண்.
தமிழ்நாட்டின் வருவாய் குறைந்திருப்பதும் கடன் அதிகரிப்பதால் அதற்கான வட்டி அதிகரித்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரிப்பதும் கவலை அளிப்பதாகச் சொல்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் முதன்மை ஆலோசகர் டாக்டர் ஆர். கண்ணன்.
“வருவாய் குறைந்திருப்பதாகச் சொல்வது கவலை அளிக்கிறது. மற்றொரு பக்கம் கடன் அதிகரிக்க அதிகரிக்க ‘Debt Service’ நாம் திரும்பச் செலுத்தும் தவணைகள் அதிகரித்துக்கொண்டே போகும். இதனால், நாம் கடனை திருப்பி அளிக்கும் காலம் அதிகமாகும். இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
“தமிழ்நாட்டின் அரசுப் போக்குவரத்துக் கழகம் நிதி ரீதியில் மிக சிக்கலான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, ‘tax to GDP’ விகிதம் குறைவாக இருக்கிறது. அதனை அதிகரிக்க வேண்டும்,” என்கிறார் கண்ணன்.
முதலீட்டுச் செலவுகளுக்குக் கடன் வாங்கினால் அதில் பிரச்சனை இல்லை. ஆனால், செலவுகளுக்காக வாங்கினால் பிரச்சனைதான் என்கிறார் தமிழக பொருளாதார நகர்வுகளை நீண்ட காலமாக கவனித்துவரும் பொருளாதார ஆலோசகரான பாலசுப்பிரமணியன்.
“ஆனால், தமிழக பொருளாதாரம் மிகவும் வலுவானது. மிகப் பெரியது. ஆகவே பெரிய சிக்கல் வராது என்றே கருதுகிறேன்,” என்கிறார் பாலசுப்பிரமணியன்.
