செளதி இளவரசர் முகமது பின் சல்மான் காந்தி சமாதிக்கு செல்லாததற்கு இஸ்லாமிய நம்பிக்கை காரணமா?

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பல தலைவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ராஜ்காட் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. இருந்தபோதிலும்கூட ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் அன்டோனியோ குட்ரேஸ், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பல தலைவர்கள் ராஜ்காட் சென்றனர்.

ராஜ்காட் சென்ற தலைவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவானும்ஆகியோரும் அடங்குவர்.
இருப்பினும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராஜ்காட் செல்லவில்லை. உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சனிக்கிழமையே டெல்லி வந்துவிட்டார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

செளதி இளவரசர் ராஜ்காட் செல்லாததற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா என்பதை பலரும் அறிய விரும்புகிறார்கள்.
மகாத்மா காந்தியை அவமதிப்பது அவரது நோக்கமாக இருந்திருக்காது என்றும் மாறாக அவரது ‘சலஃபி’ சித்தாந்தமே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அஹ்ல்-இ-ஹதீஸ் என்று அழைக்கப்படும் சலஃபிகள், எந்த விதமான சமாதிகள் அல்லது கல்லறைகளுக்கும் செல்ல மாட்டார்கள்,” என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் ஜாகிர் ஹுசைன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் அக்த்ருல் வாஸே கூறுகிறார்.

”கல்லறைகளை, உறுதியாகக் கட்டுவது கூட அவர்களைப் பொருத்தவரை (சலஃபி சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள்) தவறு,” என்று இஸ்லாமிய அறிஞர் ஜஃபருல் இஸ்லாம் கான் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நீதி சாஸ்திரத்தில் ஐந்து முக்கிய சித்தாந்தங்கள் உள்ளன. அவை ஹன்ஃபி, ஷஃபி, மாலிகி, ஹம்ப்லி மற்றும் ஜாஃபரி.

ஜாஃபரி அல்லது ஃபிக் ஜாஃபிரி, ஷியா சமூகத்தைச் சேர்ந்தது. மீதமுள்ள நான்கும் சன்னி சமூகத்தைச் சேர்ந்தவை.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ஹன்ஃபி சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள்.
இந்த சித்தாந்தங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் கடைசி தீர்க்கதரிசியான முகமது நபியின் மரணத்திற்குப்பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து தோன்றியதாகவும், இவை அனைத்தும் வெவ்வேறு இமாம்களால் சொல்லப்பட்ட இஸ்லாத்தின் விளக்கங்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே முகமது நபியின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் பல விஷயங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கக்கூடும்.

அஹ்ல்-இ-ஹதீஸ், இஸ்லாமின் புனித நூலான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் படி மட்டுமே இஸ்லாத்தை நம்புகிறது.

ஹதீஸ் என்பது நபிகள் நாயகத்தின் வாசகங்கள் மற்றும் நபிகள் நாயகம் வெவ்வேறு காலங்களில் செய்த செயல்களை அடிப்படையாகக் கொண்ட தொகுப்புகள் ஆகும்.