தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் – கட்சிக்குள் என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் சிக்கிய 3 பாஜக நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பல நாட்கள் கழித்த பிறகே இந்த நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது.
குற்றப் பின்னணி கொண்ட நிர்வாகிகளை களையெடுக்கும் பணியை தமிழ்நாடு பாஜக தொடங்கியுள்ளதா? மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழிசை பேட்டியால் சர்ச்சை
‘‘கட்சியில் எனக்கு வருத்தம் என்னவென்றால், சமீப காலமாக சமூகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.கவில் பொறுப்புகளில் உள்ளனர். இதைத் தவிர்த்து, கட்சியில் உண்மையில் கடுமையாக உழைக்கக் கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்,’’ என்று தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜன் சமீபத்தில் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதற்காக தமிழிசையை விமர்சித்து, பாஜக ஓபிசி பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, கடந்த 19ம் தேதி திருச்சி சூர்யாவின் பதவி பறிக்கப்பட்டது.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பாஜக தோல்விக்கு அண்ணாமலையே காரணம் என்று விமர்சித்த அக்கட்சியில் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளராக இருந்த கல்யாணராமனும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.கவில் பொறுப்புகளில் உள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இந்த நிலையில்தான், குற்ற வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தலைவர் அகோரம் ஆ்கியோரை கட்சியில் இருந்து நீக்கி ஜூன் 23ம் தேதி தமிழ்நாடு பாஜக அறிவிப்பு வெளியிட்டது.
தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்டத்தலைவர் அகோரம் மும்பையில் மார்ச் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோர், கடந்த மே மாதம் திருவாரூர் பா.ஜ.க முன்னாள் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் மதுசூதனனை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
