தமிழ்நாட்டு பக்தர்களின் வாக்கு பாஜகவுக்கு கிடைக்குமா?
அயோத்தியில் புதிதாக திறக்கப்படவுள்ள ராமர் கோவிலின் அழைப்பிதழ்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் பரவலாக விநியோகித்து வருகின்றனர். இந்த முயற்சி பாஜகவின் அரசியலுக்கு பலன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாறுபட்ட கருத்துகள்
அண்மையில், சென்னையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பேசும்போது ராமர் கோவில் திறப்பு விழா பற்றி எழுந்த கேள்விக்கு ‘முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கோவிலுக்கு திறப்பு விழா நடத்துவதை விமர்சிக்கும் சங்கரச்சார்யார்களின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.
அதேநேரம் திறப்பு விழாவுக்கு செல்லக்கூடிய ஒருவரின் விருப்பத்தைக் குறைகூற மாட்டேன். நானே வேறு ஒரு சமயத்தில் அங்கே செல்வேன்” என்று பதில் கூறினார். காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஊடகங்களில் பேசும்போது பக்தர்களின் அயோத்தி பயணத்திற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழகம், ராமர் கோவில் திறப்பு விழாவின் அரசியலைவிமர்சித்துள்ளது.
பாஜக கூட்டணியிலிருந்து முறித்துக்கொண்டு வெளியே வந்திருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராமர் கோவில் விழாவிற்கு செல்வேன் எனச் சொல்வதில் தயங்கவில்லை. இருப்பினும் அவர் உடல்நிலை காரணமாக பங்கேற்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதிமுக சார்பில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, கரசேவைக்கு ஆதரவான நிலைப்பாட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எடுத்திருந்தார் என நினைவுகூர்ந்தார்.
முக்கிய அரசியல் கட்சிகள் எச்சரிக்கையாக கருத்து வெளியிடுவதன் காரணம் பக்தர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான். எனவே, ராமர் கோவில் கட்டுவதையும், அந்த விழாவையே தனது அரசியல் மேடையாக மாற்றுவதிலும் வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
