தமிழ்நாடு ஆளுநரை கையாள முடியாமல் திணறுகிறதா திமுக?மாநில பாஜக நிலைப்பாடு மாறுவது ஏன்?

திராவிடம் குறித்தும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் மீண்டும் மீண்டும் இப்படிப் பேசுவது ஏன்?

தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இப்போது இரு நாட்களுக்கு முன்பாக திருச்சியில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசிய பேச்சு, மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவு தினம் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுப் பேசினார்.
திராவிட இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு எதிரானது என்பதையே அவரது பேச்சின் மையக் கருத்தாக இருந்தது.

“நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு வந்தபோது, தமிழகத்திலிருந்து சுதந்திரத்திற்குப் பாடுபட்ட வீரர்களின் பட்டியலைக் கேட்டேன். மாநில அரசிடமிருந்து வந்த பட்டியலில் 40க்கும் குறைவான பெயர்களே இருந்தன. அந்தப் பட்டியலில் மருது சகோதரர்களின் பெயர்கள் இல்லை. சிறிய மாநிலமான நாகாலாந்திலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள். ஆனால், எப்படி தமிழ்நாட்டில் மட்டும் குறைவாக இருக்க முடியும் என ஆராய்ந்தேன். அப்படி ஆராய்ந்தபோது பல ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள்.
சிவகங்கை மாவட்டம்தான் சுதந்திரத்திற்கான சிந்தனையும் வீரர்களும் உருவான இடம். இந்த இடத்தில் மக்கள் கூடக்கூடாது என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 24 முதல் அக்டோபர் 31வரை இந்த ஆணை அமலில் இருக்கிறது. 2012ல், சில சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு சிலர் கொல்லப்பட்டார்கள். அதனால்தான், இந்த நாயகர்களை, அவர்களது தியாகத்தை ஒட்டுமொத்தமாக கொண்டாட தடை விதிக்கப்படுகிறது.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மாறாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்காக இப்போதும் தடை விதிக்கப்படுகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் நினைவு நாளிலாவது இது போன்ற பிரச்னை ஏற்பட்டால், இப்படித் தடை விதிக்கப்படுமா? இல்லை.

ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றால் இப்படிச் செய்யப்படுகிறது. இன்று இந்தத் தலைவர்கள் ஜாதி தலைவர்களாக சுருக்கப்பட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. எப்படி, ஏன்? இந்தத் தலைவர்களை மாநில அரசு கொண்டாடியிருந்தால் மக்களும் சேர்ந்து கொண்டாடியிருப்பார்கள். பள்ளி பாடப் புத்தகங்களில் அவர்களைப் பற்றி இல்லை.

c

சுதந்திரப் போராட்ட இயக்கத்தைப் பற்றி பேச இங்குள்ள ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். வெட்கப்படுகிறார்கள். அதைப் பற்றிப் பேசினால், அவர்கள் அம்பலப்பட்டு போவார்கள். இவர்கள் இந்திய சுதந்திரத்திற்கு எதிராகப் பேசியவர்கள். இவர்கள் பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு சுந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்கள். ” என்று அவர் கூறினார்.