‘தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன’ – ஆளுநர் சொல்வது சரியா?

தமிழக பல்கலைக்கழங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் பல பல்கலைக்கழங்களுக்கு துணை வேந்தர்களும் பதிவாளர்களும் நியமிக்கப்படாமல் இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.வி. நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் நிலை உண்மையில் எப்படியிருக்கிறது?

ஜூலை 4ஆம் தேதியன்று தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழு, கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், குறிப்பாக இந்தக் குழுக்களில் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக பல்கலைக்கழகங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி தன்மை மெல்லமெல்ல அழிந்துவருவதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததாக அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.