மூன்றாவது ஆட்சியில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவாரா? – காத்திருக்கும் சவால்கள்

நரேந்திர மோதியும் அவரது ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை எதிர்பார்த்தனர். இருப்பினும், `மோதி’ என்னும் பிராண்ட் எதிர்பார்த்த அளவுக்குப் பெரியளவில் வெற்றி பெறவில்லை என தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அப்படியானால், குறைவான வாக்கு சதவீதத்துடன் மோதி வெற்றி பெற்றிருப்பது உலக அரங்கில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? மேலும் இனி வரும் காலங்களில், மோதி, கூட்டணிக் கட்சிகளின் பேச்சைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரிட்டனை தளமாகக் கொண்ட பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸில் (Chatham House) தெற்காசியாவிற்கான மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சிட்டிஜ் பாஜ்பே கூறுகையில், “வெளியுறவுக் கொள்கையில், அவர் வலுவான கொள்கைகளுடன் வந்தாலும் பலவீனமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், வழக்கம் போல் இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான தனது முக்கிய முன்னுரிமைகளை அவர் தொடர்ந்து பின்பற்றுவார்” என்றார்.

பாஜகவின் அறிக்கை இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதைக் குறிப்பிடுகிறது, மேலும் மோதியின் அடுத்த ஐந்தாண்டுகள் அந்த இலக்கை அடைய ஒரு பெரிய முன்னெடுப்பைக் காணும் என்று பாஜ்பே கருதுகிறார்.
அதேநேரம், பாஜகவின் வெற்றி, மேற்கத்திய உலக அரங்கில் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டு உணர்வுகளின் கலவையைக் கொண்டு வருகிறது.