மூன்று இந்தியர்கள் கைதால் கனடா – இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் – என்ன நடக்கிறது?

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு,” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார்.

2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

“ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை,” என்றார்.
நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார்.

“கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது,” என்று அவர் கூறினார்.