டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில், டொனால்ட் டிரம்பை மிக கடுமையான விமர்சனம் செய்த வான்ஸ் இப்போது டிரம்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வளர்ந்தது எப்படி?
“டிரம்ப் வேண்டாம் என்று கூறுபவன் நான். அவரை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை”
“என்ன ஒரு முட்டாள்?”
“கண்டனத்துக்கு உரியவர் டிரம்ப்!”
இப்படியாக டிரம்ப் பற்றி ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜே.டி.வான்ஸ். 2016ம் ஆண்டு வான்ஸ் எழுதிய ஹில்பில்லி எலெஜி (Hillbilly Elegy) என்ற புத்தகம் அவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றபோது ட்விட்டரிலும், நேர்காணலிலும் டிரம்ப் குறித்து வான்ஸ் இதைத் தான் கூறினார்.
அதே ஆண்டு பேஸ்புக்குக்கு வான்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தியில் “டிரம்ப் ஒரு மோசமான ஆள் அல்லது அமெரிக்காவின் ஹிட்லர் என்று நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஒரு சில வருடங்களில் டிரம்பின் நெருங்கிய அரசியல் வட்டாரங்களில் ஒருவராக மாறியிருக்கிறார் வான்ஸ்.
ஓஹையோ மாகாணத்தில் முதன்முறையாக செனட்டராக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது டிரம்பின் பக்கம் நிற்கிறார். துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால், 2028-ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.
உண்மையில் ஒரு மாற்றத்தை கண்டிருக்கிறார் வான்ஸ். கடினமான இளமைப் பருவத்தில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் மிகப்பெரிய உயரத்தை இவர் அடைந்தது எப்படி?
