அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி?
சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரிகள், தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது உணர்ந்ததைப் போலவே அவர்களும் உணர்வார்கள்.
பிளிங்கனின் விமானம் தரையிறங்கும் போது, அவர் சோர்வாகவும் சலிப்பாகவும் உணர்ந்திருக்கக் கூடும். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களில் மத்திய கிழக்கிற்கு பிளிங்கன் மேற்கொண்ட எட்டாவது பயணம் இதுவாகும்.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் அரசியல் மற்றும் பாலத்தீன கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது ஆகியவை மிகவும் சிக்கல் நிறைந்த செயல்பாடுகள்.
ஆனால் தற்போது அது முன்னெப்போதையும் விட மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது, ஏனெனில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தனது அரசியல் கூட்டாளியான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) உடன் அதிபர் நெதன்யாகுவின் போர்க்குழு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
