விநாயகர் சதுர்த்தி: ரசாயன சிலை தயாரிப்பு தொடர்ந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு ரசாயனம் கலந்த சிலைகளை தயாரிக்கக்கூடாது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடைவிதித்தாலும், அந்த தடை மீறப்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு, ரசாயன சிலை தயாரிப்பவர்கள், கரைப்பவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

ரசாயன சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் நீண்டநாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் சரிசெய்யமுடியாத அளவில் மாசுபாடு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருந்தபோதும், நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயன சிலைகள் தயாரிப்பது தொடர்வது ஏன் என்றும் தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தொய்வு தொடர்வது ஏன் என்றும் கேள்விகள் எழுகின்றன.
இந்த ஆண்டும், ரசாயன சிலைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதனைஅடுத்து, விதிமீறல் தொடர்வது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கேட்டபோது, ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்று அரசாங்கம் தடுத்தால், சுற்றுச்சூழல் பிரச்னை, மதரீதியான பிரச்னையாக மாறும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரச்சனையை அமைதியான முறையில்தான் தீர்க்கமுடியும் என்கிறார்.

ஆனால் பிற மாநிலங்களில் சிலை தயாரிப்பு காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ரசாயன சிலை தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என்று ஆதாரங்களை சுற்றுச்சூழல் நிபுனர்கள் வைக்கிறார்கள். நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் விதிமீறல்கள் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது என்றும் சொல்கிறார்கள்.