வயநாடு நிலச்சரிவில் 144 பேர் பலி – மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம்
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மேப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144-ஆக உயிர்ந்திருப்பதாக கேரள முதலமைச்சரின் அலுவலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த துயரமான நிகழ்வுக் காரணமாக கேரளாவில் 2 நாட்கள் (ஜூலை 30,31) அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
காயமடைந்த 192 நபர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 150 குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
‘நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும்’ என மாநிலத்தின் உயர்மட்ட அதிகாரி வி.வேணு ஊடகத்திடம் கூறினார்.
“பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு சிறிய குழு ஒன்று ஆற்றைக் கடந்து பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடைந்துள்ளது. மேலும், நிறைய உதவிகள் தேவைப்படும் என்றும், ஆனால் ஆற்றின் வலுவான நீரோட்டம் காரணமாக மீட்புப் பணியாளர்கள் ஆற்றைக் கடக்க கடினமாக இருந்தது’ என வேணு கூறினார்.
பலத்த மழை பெய்துவருவதால் வான்வழியாக மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய உள்ளூர் வாசி ரஷீத் படிக்கல்பரம்பன், ‘குறைந்தபட்சம் நள்ளிரவில் 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம், இதனால் பாலம் அடித்து செல்லப்பட்டது’ என கூறியுள்ளார்.
மற்றொரு உள்ளூர் வாசியான ராகவன் சி அருணமாலா இந்த பயங்கரமான நிகழ்வை குறித்து பேசிய போது, ‘இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய நபர் ஒருவர் உதவி கேட்டு கூச்சலிடுவதை நான் பார்த்தேன். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடந்த சில மணி நேரங்களாக அவரை நெருங்க முயற்சித்து வருகின்றனர்’ என கூறினார்.
