பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் உயர் சாதியினர் ஆதிக்கம் ஏன்?

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் 88 முதல் 92 சதவீதம் வரை பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 147 தலைமைப் பொது மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 135 பேர், அதாவது 92 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பொது மேலாளர் பதவிகளில் 667 பேர் இருக்கிறார்கள். 588 பேர் (88%) பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரைப் பொருத்தவரை இந்த இரு பதவிகளிலும் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே இருக்கின்றனர்.

துணைப் பொதுமேலாளர் பதவிகளில் 81 சதவீதம் பொதுப் பிரிவினரும் 8 சதவீதமே பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். உதவி பொது மேலாளர் பதவிகளில் 72 சதவீதம் பொதுப் பிரிவினரும் 14 சதவீதம் பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். தலைமை மேலாளர் பதவிகளில் 61 சதவீதம் பொதுப் பிரிவினரும் பிற்படுத்தப்பட்டோர் 19 சதவீதமும் உள்ளனர்.

பொதுத் துறை வங்கிகளில் உள்ள பணியிடங்களைப் பொறுத்தவரை, பணிச் சேர்க்கையின்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பட்டியலினத்தோருக்கு 15 சதவீதமும் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மண்டல் கமிஷன் தனது பரிந்துரைகளைத் தரும்போது, பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது தொடர்பான இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் பதவி உயர்வில் ஐந்து ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.