மோதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் எதிர்கட்சிகள்
பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்கட்சிகள் எதிர்வினையாற்றியுள்ளன. இதுதொடர்பாக தற்போது தேசிய அளவில் விவாதங்களும் எழுந்துள்ளன.
வாக்கு வங்கி அரசியலுக்காக பிரதமர் மோதி பொது சிவில் சட்டம் குறித்து தற்போது பேசுவதாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும்போது, “பொது சிவி்ல் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார். மோதியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், “குடிமக்களின் சம உரிமை குறித்தும் நமது அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று உச்ச நீீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஊறியவர்கள் இந்த சட்டத்தை கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,” என்று எதிர்கட்சிகளை சாடினார் பிரதமர் மோதி.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பொது சிவில் சட்டத்தை திமுக கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.
