போலீஸ் மாஅதிபர் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியுமா? இலங்கையில் புதிய குழப்பம்

இலங்கையில் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது.

போலீஸ் மாஅதிபர் பதவிக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கு என்ன தொடர்பு? போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்? இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த 24ம் தேதி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைக்கால தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்த பதவிக்கு சட்ட ரீதியாக தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வை அடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைத்த பிறகு, பதில் போலீஸ் மாஅதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோன் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார்.

எனினும், இலங்கையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.