மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவுக்கு உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென சில கட்சிகள் கோரியுள்ளன. இந்தப் பிரச்னையின் பின்னணி என்ன?

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதத்தை ஒதுக்கீடு செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாரி ஷக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே இந்திய நாடாளுமன்றத்தில் பலமுறை அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாமல் போன இந்த மசோதா, பல கட்சிகள் தற்போது ஆதரிப்பதால் இந்த முறை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அதாவது வரவுள்ள சட்டம
ன்றத் தேர்தல்களிலோ, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலோ அமலுக்கு வராது என்றும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகே இது அமலுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்த இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், இந்த இட ஒதுக்கீட்டிற்குள் பட்டியலினத்தோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை தொகுதி மறுசீரமைக்கப்படும் போதும் பெண்களுக்கான தொகுதிகள் மாற்றி அமைக்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசம், அசாம், பிகார், சட்டீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதுதவிர பழங்குடியினர்,பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடும் அமலில் இருக்கிறது.

ஆனால், சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில் மக்களவையில் பெண் உறுப்பினர்களின் விகிதம் 15 சதவீதமாகவும் மாநிலங்கள் அவையில் சுமார் 14 சதவீதமாகவும் இருக்கிறது.

சட்டமன்றங்களை எடுத்துக்கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, இமாச்சால பிரதேசம் போன்ற முக்கியமான மாநிலங்களில் பெண் உறுப்பினர்களின் விகிதம் வெறும் 5 சதவீதத்தில்தான் இருக்கிறது