டெல்லியில் உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை
புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வடித்த 27 அடி உயர நடராஜர் சிலை ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அஷ்ட தாது எனப்படும் எட்டு உலோகங்களால், காவிரி ஆற்றின் வண்டல் மண் கொண்டு செதுக்கப்பட்டிருப்பது இந்தச் சிலையின் சிறப்பு. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் சிலை வடித்த குடும்பத்தினர், இதை வடித்துள்ளனர் என்பது மற்றொரு சிறப்பு அம்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களால் செதுக்கப்பட்ட நடனமாடும் நடராஜர் சிலை ஜி20 மாநாட்டில், ‘பாரத் மண்டபம்’ என்றழைக்கப்படக்கூடிய அரங்கின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
சோழர் காலந்தொட்டே, சிற்பக் கலையில் ஈடுபட்டு வரும் பாரம்பரியம் கொண்டது தேவசேன ஸ்தபதியின் குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ண ஸ்தபதி, ஸ்ரீகந்த ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகிய மூன்று சகோதரர்களால் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதில் பங்காற்றியுள்ளனர். அதன் பிறகு, 16ஆம் நூற்றாண்டில் தாராசுரம் மற்றும் சுவாமி மலையில் உள்ள கோவில் சிலைகளின் நிர்மாணப் பணிகளுக்காக சுவாமி மலைக்கு வந்த குடும்பத்தினர் அங்கேயே தங்கி சிற்பக் கலையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள், 34 தலைமுறைகளாக சிலைகள் வடிக்கும் பணியை பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சகோதரர்களின் தந்தை தேவசேன ஸ்தபதி, தேசிய விருது பெற்றவர். பிரிட்டன், அமெரிக்கா, மலேசியா, மொரிசீயஸ், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்து கோவில்கள் பலவற்றுக்கு சிலை வடித்துக் கொடுத்தவர்.
தேவசேன ஸ்தபதி குடும்பத்தினர் சுவாமி மலையில் பலருக்கு சிற்பக் கலை பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது அந்த ஊரில் 600 சிற்பக் கலைஞர்களும் 100 சிற்பக் கூடங்களும் உள்ளன
பொதுவாக காட்சிப் பொருள்களாக வைக்கப்படும் சிலைகள் செம்பு, பித்தளை, ஈயம் என மூன்று உலோகங்களால் செய்யப்படும். அந்தச் சிலைகளின் உருவங்களில் கண்கள் திறந்திருக்காது.
வீட்டின் பூஜை அறையில், கோவில்களில் வைக்கப்படும் சிலைகள் செம்பு, பித்தளை, ஈயம் தவிர கூடுதலாக சிறிது வெள்ளி மற்றும் தங்கம் கலந்து செய்யப்படும். இந்த சிலைகளில் கண்கள் திறந்திருக்கும். இவை பஞ்சலோக சிலைகள் எனப்படும். பெரும்பாலான சிலைகள் பஞ்சலோக சிலைகளாகத்தான் இருக்கும்.
