வீட்டில் பணிபுரிந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து தானே இறுதிச்சடங்கு செய்தார் கவுதம் கம்பீர் !!

தன் வீட்டில் பணிபுரிந்த பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து அப்பெண்ணின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான கவுதம் கம்பீர் தானே இறுதிச்சடங்கு செய்து அப்பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தார். கவுதம் கம்பீரின் மனிதநேயம் மிக்க செயலுக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கவுதம் கம்பீர் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தவர் சரஸ்வதி பத்ரா (49) இவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். திருமணமான பின்பு இரு ஆண்டுகளில் கணவனால் கைவிடப்பட்ட அப்பெண் கவுதம் கம்பீர் நண்பர் ஒருவர் மூலமா கம்பீர் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

சரஸ்வதி பத்ராவுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தது. இந்நிலையில் அவர் உடல்நிலை மோசமானதால் கடந்த 14ம் தேதி டில்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் கம்பீரே ஏற்றுக் கொண்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 21ல் சரஸ்வதி உயிரிழந்தார்.

இதையடுத்து ஒடிசா மாநிலம் ஜோஜ்பூரில் உள்ள சரஸ்வதி சகோதரர் குடும்பத்தினருக்கு கம்பீர் தகவல் அனுப்பினார். ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவரது உறவினர்களும் டில்லிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் சூழலை கம்பீரிடம் தெரிவித்த சரஸ்வதி குடும்பத்தினர் இறுதிச்சடங்கை நீங்களே செய்துவிடும் படி வேண்டுகோள் விடுத்தனர். சரஸ்வதி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கம்பீர், அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்து அவர்கள் வழக்கப்படி நல்லடக்கம் செய்தார்.