பிரதமர் மோதியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொன்னது?

வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கோவை நகரில் வாகனப் பேரணி நடத்த பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை காவல்துறையினர் பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பா.ஜ.க-வினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

என்ன நடந்தது இச்சம்பவத்தில்?
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி, நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் பரப்புரையை துவங்கியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், தனது பரப்புரையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிற்கு அவ்வப்போது வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இன்று (வெள்ளி, மார்ச் 14) மதியம் கன்னியாகுமரியில் நடந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அடுத்ததாக, கோயம்புத்தூருக்கு வரும் மார்ச் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அன்றைய தினம் பிரதமர் மோதியை வைத்து வாகனப் பேரணி நடத்த பாஜக-வினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக அனுமதி கோரி கோவை மாநகர காவல்துறைக்கு பாஜக சார்பாக விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணி நடத்த கோவை காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ‘ரோடு ஷோ’ எனப்படும் வாகனப் பேரணி நடத்தி மக்களைச் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிரதமர் மோதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவுக்காக பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார்.
இதன் நிறைவு விழா திருப்பூர் அடுத்த பல்லடம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த போது அதில் பிரதமர் மோதி பங்கேற்றுப் பேசியிருந்தார். இன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த ஆண்டில் மட்டும், ஜனவரி முதல் இதுவரையில் நான்கு முறை பிரதமர் தமிழ்நாடு வந்துள்ள நிலையில், மார்ச் 18-ஆம் தேதி திங்கட்கிழமை கோவை மாநகரில் பிரதமர் வாகன பேரணி நடத்த பா.ஜ.க-வினர் திட்டமிட்டிருந்தனர்.

கோவை நகரின் சாய்பாபா காலனியில் துவங்கி, வடகோவை, சிந்தாமணி, காமராஜபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதி வரை, 4கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோதி வாகன பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கு அனுமதி கேட்டு,கோவை பா.ஜ.க மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார், கோவை மாநகர ஆணையாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.